பரமக்குடியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி

பரமக்குடியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2019-05-15 22:30 GMT

பரமக்குடி,

பரமக்குடியில் சுமார் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மழையும் பெய்யாததால் கண்மாய்கள், குளங்கள் வறண்டு போய் நீரின்றி காய்ந்து கிடக்கின்றன. இதனால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்றும் குடிக்க நீரின்றி அலைகின்றன.

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் நீர்மட்டம் குறைந்து போய் பயனற்று வருகின்றன. இதனால் ஏராளமானோர் பணத்தை செலவழித்து மாற்று இடத்தில் புதிய ஆழ்குழாய் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பரமக்குடியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

காவிரி குடிநீர், நகராட்சி குடிநீர் என எதுவும் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தினமும் காலை, மாலை நேரத்தில் குழாய்களை பார்த்து பார்த்து மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். வேறு வழியின்றி 1 குடம் தண்ணீர் ரூ.5–க்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்