கட்டாய கல்வி சட்டப்படி அனுமதிக்கப்படும் ஏழை மாணவர்களை கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கும் நிலை; மாவட்ட கல்வித்துறை பாராமுகம்

கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படும் ஏழை, எளிய மாணவர்களிடம் கட்டணம் செலுத்த நிர்ப் பந்திக்கும் நிலை உள்ளது. இதில் கல்வித்துறை பாராமுகம் காட்டுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-05-15 22:45 GMT
விருதுநகர்,

மத்திய அரசு அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை எளிய மாணவர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை அந்த பள்ளி நிர்வாகத்தினருக்கு மத்திய அரசே செலுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மத்திய அரசு இந்த கல்வி கட்டணத்தை பள்ளி நிர்வாகத்துக்கு செலுத்துவதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுவதால் பள்ளி நிர்வாகத்தினர் இந்த இட ஒதுக்கீட்டின் படி ஏழை எளிய மாணவர்களை சேர்ப்பதற்கு தயக்கம் காட்டும் நிலை இருந்து வருகிறது.

கடந்த கல்வி ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை எளிய மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இதை கண்காணிக்க வேண்டிய மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இதற்கான விண்ணப்பங்கள் வரவில்லை என்ற காரணத்தை கூறி முறையாக கண்காணிப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை.

நடப்பு கல்வி ஆண்டிலும் சில தனியார் பள்ளிகள் விண்ணப்பித்த ஏழை எளிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிலையில் பல தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஏழை மாணவர்களை சேர்ப்பதில் தயக்கம் காட்டும் நிலை இருந்து வருகிறது. இதனை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, ஏழை மாணவர்களை சேர்க்க மறுப்பதை ஆய்வு செய்து உறுதி செய்யாமல் மாணவர்களை சேர்க்க இன்னும் கால அவகாசம் இருப்பதாக கூறி நடவடிக்கை எடுப்பதை தட்டிக்கழிக்கும் நிலை உள்ளது. மொத்தத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழை எளிய மாணவர்கள் பள்ளிகளில் சேருவதை முறையாக கண்காணிக்காமல் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பாராமுகமாகவே இருக்கும் நிலை தொடருகிறது.

சில பள்ளி நிர்வாகத்தினர் இட ஒதுக்கீட்டில் அனுமதி கேட்கும் மாணவர்களிடம் முதலில் கட்டணத்தை செலுத்துமாறு நிர்ப்பந்திப்பதுடன் மத்திய அரசிடம் இருந்து கல்வி கட்டணம் கிடைக்கும்போது பணத்தை திருப்பித்தருவதாக உறுதி கூறும் நிலையும் உள்ளது.

கட்டணம் செலுத்த வசதியில்லாத மாணவர்களுக்காகத்தான் மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி வரும் நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் ஏழை மாணவர்களை கட்டணம் செலுத்த வற்புறுத்துவது ஏற்புடையதல்ல. பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் இந்த பிரச்சினை குறித்து தெரிவித்த போதும் குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்களே தவிர இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாராமுகமாக உள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இல்லையேல் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

மேலும் செய்திகள்