மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது - சரத்குமார் பேச்சு

முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது என்று ச.ம.க. தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

Update: 2019-05-15 23:10 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் திருப்பரங்குன்றம் பஸ் நிலையம், தனக்கன்குளம், பி.ஆர்.சி.காலனி, நாகமலைபுதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவர் இல்லையென்றாலும் அவரது வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு, வருகிற 23-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று கூறி வருகிறார். ஆட்சியை கலைத்து முதல்-அமைச்சராக வேண்டும் என்பது ஒரு கட்சிக்கும், அக்கட்சியின் தலைவருக்கும் உகந்ததா? ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது.

சட்டசபையில் மக்களுக்காக அவர் குரல் கொடுப்பதில்லை. சட்டசபையில் இருந்து வெளியேறிவிடுவார். சட்டையை கிழித்து கொண்டு வந்துவிடுவார். எதற்காக அவ்வாறு செய்தோம் என்று அவருக்கே தெரியாது. ராகுல்காந்தியை பிரதமராவார் என்று கூறிய அவர், தற்போது சந்திரசேகரராவை பேசிக்கொண்டிருக்கிறார். புதிதாக கட்சி ஆரம்பித்தவர் தீவிரவாதம் என்று தேவையில்லாததை பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி வெற்றி பெறுவது உறுதி. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்