கல்லூரிகளில் உயர் படிப்புக்கு சேர பதிவு; சென்டாக் இணையதளம் செயல்படாததால் குளறுபடி, விண்ணப்பிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதி

சென்டாக் இணையதளம் செயல்படாததால் ஏற்பட்ட குளறுபடியால் கல்லூரிகளில் உயர் படிப்புக்கு சேர விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2019-05-15 23:30 GMT
புதுச்சேரி,

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதியாக 6 கல்லூரிகள், 72 உயர்நிலைப்பள்ளிகள், 59 மேல்நிலைப்பள்ளிகளில் சென்டாக் மூலம் சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதையொட்டி மாணவர்களுக்கு உதவுவதற்காக சென்டாக் ஊழியர்களும் தயார் நிலையில் இருந்தனர். இந்தநிலையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இந்த சேவை மையங்களுக்கு நேற்று காலை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர். அவர்களுடன் பெற்றோர் களும் வந்து இருந்தனர்.

ஆனால் அறிவித்தபடி காலை 9 மணிக்கு சென்டாக் இணையதளம் செயல்படவில்லை. தொடர்ந்து அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் தோல்வியில் முடிந்தது. இதனால் பகல் 11 மணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சென்டாக் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் இணையதள கோளாறால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் ஆர்வத்துடன் வந்த மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

அதன்பின் பகல் 12.30 மணி அளவில் இணையதள சேவை சரியாகி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அதற்கு முன் மாணவ, மாணவிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிட்டனர். அங்கிருந்த ஒருசிலர் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்