மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை தலைவராக தேவன் பார்தி நியமனம் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

மராட்டியத்தில் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மாநில பயங்கரவாத தடுப்பு படை தலைவராக தேவன்பார்தி நியமிக்கப்பட்டார்.

Update: 2019-05-16 00:44 GMT
மும்பை,

மராட்டிய மாநில அரசு நேற்று கூடுதல் டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.க்கள் என 19 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதில் மும்பை பொருளாதார குற்ற பிரிவு இணை கமிஷனராக இருந்த தேவன் பார்தி மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக இருக்கும் அதுல்சந்திர குல்கர்ணி குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக புனேக்கு மாற்றப்பட்டார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேவன்பார்தி 1994-ம் ஆண்டு ஐ.பி.எஸ்.பிரிவை சேர்ந்தவர் ஆவார். 2008-ம் ஆண்டின் பயங்கரவாத தாக்குதல், பத்திரிகையாளர் ஜெடே கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார். மேலும் இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை ஒடுக்கியதில் அவரது பங்கு முக்கியமானதாகும்.

மும்பை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணியாற்றிய தேவன் பார்தி நாடாளுமன்ற தேர்தலையொட்டி அண்மையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டு இருந்தார்.

இதேபோல் குற்றப்பிரிவு இணை கமிஷனர் அசுதோஷ் தும்ரே ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்த்தப்பட்டார். அனுப்குமார் சிங், வினித் அகர்வால், சுனில் ராமாந்த், பிரதன்யா சரவாடே மற்றும் சன்ஜீவ் சிங்கால் ஆகியோரும் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்த்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்