குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-05-16 22:45 GMT

வேலூர்,

வேலூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு 5 நாட்கள் அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் உள்ள 28 மற்றும் 30 ஆகிய வார்டுகளில் கடந்த 11 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது ரம்ஜான் நேரம் என்பதால் பொதுமக்கள் தண்ணீரின்றி சிரமப்பட்டனர். இந்த நிலையில் நேற்றும் தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று சாலைமறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

அப்போது காவிரி கூட்டுக்குடிநீர் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை என்றும், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்