கோலார் நகரசபையில் கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு குடிநீர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்றால் கடும் நடவடிக்கை

கோலார் நகரசபையில் கலெக்டர் மஞ்சுநாத் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், குடிநீர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-05-16 22:00 GMT
கோலார்  தங்கவயல்,

கோலார் மாவட்ட கலெக்டர் மஞ்சநாத் நேற்று காலை கோலார் நகரசபை அலுவலகத்துக்கு திடீரென்று வருகை தந்தார். எந்த தகவலும் இன்றி, எதிர்பாராத வகையில் கலெக்டர் மஞ்சுநாத், நகரசபைக்கு வந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர், நகரசபையில் உள்ள ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது ஊழியர்களின் வருகை பதிவேட்டை சரிபார்த்தபோது, ஊழியர்கள் சரியாக பணிக்கு வராமல் கையெழுத்திட்டது தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த கலெக்டர் மஞ்சுநாத், சரியாக பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அவர் நகரசபையில் முக்கிய ஆவணங்களை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து கலெக்டா் மஞ்சுநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கோலார் டவுனில் 2,500-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. அவைகள் ஆண்டுதோறும் தங்கள் நிறுவனங்களுக்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால் ஆவணங்களை பார்த்தால், 200 நிறுவனங்கள் மட்டுமே சரியாக உரிமத்தை புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. இதில் வருவாய் துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் உரிமத்தை புதுப்பிக்காத வர்த்தக நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கவில்லை எனில் அந்த வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். மேலும் வருவாய் துைற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. கோலார் டவுனிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பிரச்சினையை கோலார் நகரசபை சரியாக கையாளவில்லை என்று புகார்கள் வந்துள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க நகரசபைக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்றால் நகரசபை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்