தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார் கொடுத்தனர்.

Update: 2019-05-16 22:45 GMT
திருப்பூர், 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என்று பேசியுள்ளார்.

இந்திய இறையாண்மை, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், அமைதியாக வாழும் மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார். எனவே கமல்ஹாசன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் மனு ஏற்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதேபோல் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி ஒன்றிய, நகரம் சார்பில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
30-ந்தேதிக்குள்

மேலும் செய்திகள்