மோட்டார் சைக்கிளில் சென்ற படகு பந்தய வீரருக்கு அரிவாள் வெட்டு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

நாசிக் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த படகு பந்தய வீரரை அரிவாளால் வெட்டிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-16 22:15 GMT
நாசிக்,

நாசிக் மாவட்டத்தை சேர்ந்தவர் நிகில் சோனவானே. இவர் மாநில அளவிலான படகு பந்தய சாம்பியன் ஆவார்.

இவர் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 19- ந்தேதி வரை 3 நாட்கள் புனேயில் உள்ள ராணுவ படகு சங்கத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க இருந்தார். ஏற்கனவே இதே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தநிலையில், அவர் கடந்த செவ்வாய்க்கிழமை நாசிக் மாவட்டம் சோப்டா லாவ்ன்ஸ் அருகே தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது திடீரென 3 பேர் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர்.

அவர்கள் நிகில் சோனவானேவிடம் புகையிலை கேட்டனர். அவர் தன்னிடம் புகையிலை இல்லை என கூறியதும் திடீரென அவர்கள் 3 பேரும் நிகில் சோனவானேவை தாக்க தொடங்கினர். இதில் ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டினார்.

இதில், படுகாயமடைந்த நிகில் சோனவானே சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து அந்த நபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதன்பின்னர் அவரது நண்பர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிகில் சோனவானேவை அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பஞ்சவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, படகு பந்தய வீரரை வழிமறித்து தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவர் 21 வயது வாலிபரான தீபக் சுக்தேவ் தாகலே என்பதும், மற்ற 2 பேரும் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்