விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் முதல்-மந்திரியிடம் சரத்பவார் நேரில் வலியுறுத்தல்

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேரில் சந்தித்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்.

Update: 2019-05-16 23:15 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், குடிக்கவும் நீரின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். கால்நடைகள் கூட தண்ணீருக்காக தவித்து வருகின்றன.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வறட்சி பதித்த சோலாப்பூர், சத்தாரா, பீட் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாநிலத்தில் நிலவும் வறட்சி கடந்த 1972-ம் ஆண்டை விட மிக மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை அவரது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவில் சந்தித்து பேசினார்.

பின்னர் சரத்பவார் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2012-13- ம் ஆண்டு மத்திய அரசு ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கியது, அதை அடிப்படையாக கொண்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க முதல்-மந்திரியை வலியுறுத்தினேன். அதுமட்டும் இன்றி கால்நடைகளுக்கு தீவனம், தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், “ மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார். வறட்சி நிலை குறித்தும், நிவாரண நடவடிக்கை குறித்தும் பேசினார். அரசு ஏற்கனவே பல்வேறு நிவாரண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவரது கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்