மாவட்டத்தில் 500 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஆய்வில் 500 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களை பள்ளியில் சேர்த்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-05-17 21:45 GMT
நாமக்கல், 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கு எடுக்கும் பணி நடந்தது.

இதில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் வீடு வீடாக சென்று 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற மற்றும் இடம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக மலைகிராமங்கள், செங்கல் சூளைகள், கோழிப்பண்ணைகள் மற்றும் லாரி பட்டறைகளில் ஆய்வுகள் நடந்தது. கடந்த 15-ந் வரை நடந்த கணக்கெடுப்பின்படி 2 ஆயிரத்து 967 குடியிருப்பு பகுதிகள் மற்றும் 2 ஆயிரத்து 651 பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் 6 முதல் 14 வயது வரை 216 பள்ளி செல்லா குழந்தைகளும், 15 முதல் 18 வயது வரை 284 பள்ளி செல்லா குழந்தைகளும் என மொத்தம் 500 பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 69 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்திடவும், அதிகமாக பள்ளி செல்லா குழந்தைகள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உண்டு உறைவிடம் மற்றும் உண்டு உறைவிடம் இல்லாத சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்