வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வழக்கு: கோவில்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண்

பாளையங்கோட்டை அருகே புது வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் நேற்று கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2019-05-17 21:30 GMT
கோவில்பட்டி, 

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55), விவசாயி. அவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு அவ்வப்போது அவருடைய மகன்களான சிவா என்ற நாராயணன்(23), அருள் ஆகியோர் வந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு அந்த வீட்டின் பின்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், தாழையூத்து துணை சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதில் வீட்டின் ஜன்னல், கதவுகள் சேதம் அடைந்தது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில், அங்கு வெடித்தவை நாட்டு வெடிகுண்டுகள் என்பதும், அவற்றை வீட்டின் பின்பகுதியில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனின் மகன்கள் சிவா என்ற நாராயணன் (23), அவருடைய தம்பி அருள் உள்ளிட்ட சிலரை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் 2 நாட்களுக்கு முன்பு கணேசனின் மனைவி மாரியம்மாளை (44) போலீசார் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சிவா நேற்று கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட்டு சங்கர் விசாரித்து, அவரை வருகிற 31-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அருளை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்