அடகு கடையில் போலி நகையை கொடுத்து பணம் வாங்கிய முதியவர் கைது

அடகு கடையில் போலி நகையை கொடுத்து பணம் வாங்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-17 19:42 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். ரோட்டை சேர்ந்தவர் ஹரிஹந்த் ஜெயின்(வயது 54). இவர், அதே பகுதியில் நிதி நிறுவனமும், நகை அடகு கடையும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த முதியவர் ஒருவர், 4 கிராம் தங்க நகையை அடகு வைத்தார். நகையை வாங்கிய ஹரிஹந்த் ஜெயின், அவரிடம் ரூ.8,500 கொடுத்தார்.

அடுத்த அரை மணிநேரம் கழித்து மீண்டும் அதே முதியவர் அடகு கடைக்கு வந்து, தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி 20 கிராம் தங்க நகையை அடகு வைத்து பணம் கொடுக்குமாறு கேட்டார். அதை வாங்கிய ஹரிஹந்த் ஜெயின், ரூ.55 ஆயிரத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்டு அந்த முதியவர் ஆட்டோவில் ஏறி செல்ல முயன்றார்.

அப்போது ஹரிஹந்த் ஜெயின், முதியவர் கொடுத்த 20 கிராம் நகையை சோதனை செய்தபோது, அது போலி நகை என்பது தெரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்ற முதியவரை மடக்கி பிடித்து பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில் அவர், சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சின்னசாமி(60) என்பதும், போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கியதும் தெரிந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்