மின்சார ரெயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து பயணியிடம் பணம், செல்போன் அபேஸ் 2 பேருக்கு வலைவீச்சு

மின்சார ரெயிலில் பயணியிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து ரூ.5 ஆயிரம், செல்போன் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-05-17 21:31 GMT
மும்பை,

மும்பை கிர்காவை சேர்ந்தவர் ஈஸ்வர் யாதவ். இவர் சம்பவத்தன்று மும்பை சென்டிரலில் இருந்து சர்னி ரோடு செல்ல மின்சார ரெயிலில் பயணம் செய்தார். அப்போது ரெயில் பெட்டியில் அவருடன் மேலும் 2 பயணிகள் மட்டுமே இருந்தனர்.

ரெயில் கிராண்ட் ரோடு ரெயில் நிலையத்தை கடந்து சென்ற போது அங்கிருந்த 2 பேரில் ஒருவர் ஈஸ்வர் யாதவிடம் சாப்பிட பிஸ்கட் கொடுத்தார். முதலில் மறுத்த அவரை 2 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக பிஸ்கட்டை சாப்பிட வைத்தனர். இதனை சாப்பிட்ட சில நிமிடத்தில் அவர் மயங்கி இருக்கையில் சரிந்தார்.

இதன்பின்னர் சுமார் 5 மணி நேரமாக மின்சார ரெயிலில் இருந்த அவரை, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கண் விழித்த அவர் தன்னிடம் இருந்த மணிபர்சில் ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் காணாமல் போய் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவருக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை சாப்பிட கொடுத்து அந்த ஆசாமிகள் இருவரும் பணம், செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

இதுபற்றி அவர் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆசாமிகள் இருவரையும் அடையாளம் காண ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்