மராத்தா சமுதாய மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய அவசர சட்டம் மந்திரி சபை ஒப்புதல்

மருத்துவ மேற்படிப்பில் மராத்தா மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய மந்திரி சபையில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Update: 2019-05-17 21:50 GMT
மும்பை,

சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோர் பிரிவின்கீழ் மராத்தா வகுப்பினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி மராட்டிய சட்டசபையில் மசோதா நிறைவேறியது. ஆனால் இந்த ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு பொருந்தாது என மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட்டும் இந்த உத்தரவை உறுதி செய்தது.

இதன் காரணமாக இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட மராத்தா சமுதாயத்தை சேர்ந்த 250 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த மராத்தா சமுதாய மருத்துவ மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று நடந்த மராட்டிய மந்திரி சபை கூட்டத்தில் மராத்தா சமுதாயத்தினருக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மந்திரி சபை கூட்டம் முடிந்த பின்னர் இதுகுறித்து மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் கோர்ட்டின் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மராத்தா சமுதாய மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீடு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்