சின்னசேலம் அருகே, மினிலாரி-லாரி மோதல், 15 பேர் படுகாயம் - கோவிலுக்கு சென்று திரும்பியபோது சம்பவம்

சின்னசேலம் அருகே கோவிலுக்கு சென்று திரும்பியபோது மினிலாரியும், லாரியும் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-05-17 22:30 GMT
சின்னசேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் ராஜா(வயது 29). இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது குடும்பத்தினர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டோருடன் ஒரு மினிலாரியில் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த புக்கிரவாரியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து விட்டு மாலை மினிலாரியில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மினிலாரி சின்னசேலம் அடுத்த குரால் வீரபயங்கரம் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரியும், மினிலாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இதில் மினிலாரியில் வந்த மேலபுலியூரை சேர்ந்த அண்ணாமலை மனைவி உண்ணாமலை(65), பெரியசாமி மனைவி அமுதா(45), துரைகண்ணு மனைவி பெரியம்மா(55), பாலகுமார் மனைவி பஞ்சவர்ணம்(26), எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்த மணிவேல்(25), பெரியசாமி(50) உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர். டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்