அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர்; முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி

அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர். எனவே தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-05-17 23:30 GMT
காரைக்கால்,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு காரைக்கால் வந்தார். இங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த 6 கட்ட நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை காணப்பட்டது. இந்த தேர்தலில் 160 தொகுதிகளில்கூட பா.ஜனதா வெற்றி பெற முடியாது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணிதான் ஆட்சியமைக்கும். ராகுல்காந்தி தான் பிரதமராக வருவார்.

கடந்த தேர்தலின்போது பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த தேர்தல் பிரசாரத்தின்போது அவருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த திட்டத்தையும் பற்றி மக்களிடம் பேசவில்லை. திட்டங்களை நிறைவேற்றி இருந்தால்தானே பேச முடியும். மேலும் மதத்தை முன்னிறுத்தி பா.ஜனதா கட்சி வாக்குகளை சேகரிக்க முயற்சி செய்தது. அதை மேற்குவங்காள மாநிலத்தில் அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முறியடித்துள்ளார்.

தீவிரவாதம் என்பது இந்து மதத்திலும் உண்டு இஸ்லாம் மதத்திலும் உண்டு. கிறிஸ்தவ மதத்திலும் உண்டு அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர். மக்களை அழிக்கும் தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்