சிதம்பரத்தில், தடை செய்யப்பட்ட 3.40 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சிதம்பரத்தில் தடை செய்யப்பட்ட 3.40 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-17 22:30 GMT
சிதம்பரம்,

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்தது. இந்த உத்தரவை அமல் படுத்து வதில் தொடக்கத்தில் அதிகளவில் ஆர்வம் காட்டிய அதிகாரிகள், பின்னர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதன்படி நேற்று சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின்படி நகராட்சி அதிகாரிகள் சுகாதார ஆய்வாளர் பால்டெவிட்ஸ், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜாராம், பாஸ்கர், தில்லை, காமராஜ், ஆனந்தகுமார், சக்கரவர்த்தி ஆகியோர் சிதம்பரம் நகர பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

மளிகை, இனிப்பு கடைகள், ஓட்டல்கள் என்று அனைத்து கடைகளிலும் இவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேலவீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது, அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் என்று ெ- மாத்தம் 40 கிலோ இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதேபோல் வீரபத்திர சாமி கோவில் தெருவில் உள்ள ஒரு குடோனில் 3 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், தட்டுகள் போன்ற பொருட்கள் இருந்தன. இவை அனைத்தையும் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் சிதம்பரம் பகுதியில் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

இதேபோல் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் தலைமையில் ஊழியர்கள் ஒவ்வொரு கடைகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது வியாபாரிகளிடம் அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும், மீறி பயன்படுத்தினால் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர்கள் வழங்கினர்.

மேலும் செய்திகள்