பெங்களூருவில் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

பெங்களூருவில் நேற்று, போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.

Update: 2019-05-18 22:45 GMT
பெங்களூரு,

பெங்களூரு விவேக் நகரில் உள்ள பென்சன்லைனில் வசித்து வருபவர் வினோத் என்ற பச்சி(வயது 24). இவர் மீது திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. பாரதிநகர், கோரமங்களா, அசோக் நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வினோத் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அசோக் நகர் போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் வினோத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள வினோத், பெங்களூரு பன்னரகட்டா ரோடு அருகே பதுங்கி இருப்பதாக அசோக் நகர் போலீசாருக்கு நேற்று அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அசோக் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசீதர் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்ய சென்றனர்.

போலீசாரை பார்த்தவுடன் வினோத் தப்பி ஓடினார். போலீசார் அவரை விரட்டி சென்றதோடு, சரண் அடையும்படி கூறினர். ஆனால் அவர் சரண் அடையாமல் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றார்.

இதனால் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் சசீதர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 குண்டுகள் அவருடைய 2 கால்களில் பாய்ந்தன. இதனால், வினோத் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்