கந்தம்பாளையம் அருகே கார் கவிழ்ந்து பெண் பரிதாப சாவு புதுப்பெண் உள்பட 2 பேர் படுகாயம்

கந்தம்பாளையம் அருகே கார் கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் புதுப்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-05-18 22:30 GMT
கந்தம்பாளையம்,

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கரூர் பரமத்தியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 29). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உளள கல்லாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த சசிகலாதேவி (26) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் மணமக்கள் பெண் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை புதுமண தம்பதிகள் மாப்பிள்ளை வீட்டுக்கு காரில் சென்றனர். இவர்களுடன் ராஜ்குமாரின் உறவினர்கள் குருவம்பட்டியை சேர்ந்த மல்லிகா (52), சதீஸ்குமார் (30) ஆகியோரும் சென்றனர். காரை பிரசாந்த்(28) என்பவர் ஓட்டி சென்றார். இவர்கள் கந்தம்பாளையம் அருகே உள்ள பிச்சாம்பாளையம் என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் புதுப்பெண் சசிகலாதேவி, சதீஸ்குமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். புதுமாப்பிள்ளை ராஜ்குமார், கார் டிரைவர் பிரசாந்த் ஆகிய 2 பேரும் காயமின்றி தப்பினர். விபத்து நடந்தவுடன் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த புதுப்பெண் சசிகலாதேவி உள்ளிட்ட 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமண தம்பதி சென்ற கார் கவிழ்ந்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்