மானாமதுரை அருகே, தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ரெயிலை மறித்த வாலிபர் - சமூகவலைத்தளங்களில் பரவும் காட்சிகள்

மானாமதுரை அருகே தண்டவாளத்தின் குறுக்கே நிறுத்திய மோட்டார் சைக்கிளில் அமர்ந்து ரெயிலை நிறுத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-05-18 23:45 GMT
மானாமதுரை,

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரெயில் நேற்று காலையில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ரெயில் நிலையத்தை கடந்து, மானாமதுரை நோக்கி சென்றது.

லாடனேந்தல் நான்கு வழிச்சாலை பாலத்தின் அடியில் அந்த ரெயில் சென்ற போது, தண்டவாளத்தில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அதன் மேல் அமர்ந்திருந்தார்.

இதை தூரத்தில் இருந்தே கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் அலாரம் அடித்தார். பின்னர் ரெயிலின் வேகத்தை குறைத்தார். ஆனால், அந்த வாலிபர் தண்டவாளத்தைவிட்டு, மோட்டார் சைக்கிளை நகர்த்ததால் பிரேக் பிடித்து, சற்று முன்னதாகவே ரெயிலை நிறுத்திவிட்டார்.

தண்டவாளத்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அதன் மீது வாலிபர் அமர்ந்து இருப்பதை கண்டு, ரெயிலில் இருந்து பயணிகள் சிலர் கீழே இறங்கி ஓடிவந்தனர். அந்த வாலிபர் அப்போதும் நகரவில்லை. ஆர்வம் மிகுதியால் அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் இந்த காட்சியை பதிவு செய்யவும் தவறவில்லை.

பின்னர் ஒரு வழியாக அந்த வாலிபரையும், அவரது மோட்டார் சைக்கிளையும் தண்டவாளத்தைவிட்டு அப்புறப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த களேபரத்தால் கிட்டத்தட்ட அந்த இடத்தில் ரெயிலை சுமார் அரை மணி நேரம் நிறுத்த வேண்டியதாயிற்று. பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இது சம்பந்தமான தகவலை அறிந்ததும் மானாமதுரை ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதற்குள் ரெயிலை மோட்டார் சைக்கிளுடன் மறித்து நிறுத்திய வாலிபர் குறித்த காட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பரவ ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த காட்சிகள் மூலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், ரெயிலை மறித்தவர் மானாமதுரை அருகே ஏனாதி செங்கோட்டையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தச்சு தொழிலாளியான அவர், சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாக தெரியவந்தது. அவரை தேடி போலீசார் அங்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டு இருந்தது.

எனவே மது போதையில் அவர் ரெயிலை மறித்தாரா? வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்