சிறுகுடல் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சிறுகுடல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-05-18 22:30 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா சிறுகுடல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 15, 16-ந் தேதிகளில் சுப்ரமணிய சுவாமி வீதிஉலா வந்தார். நேற்று முன்தினம் காலையில் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மாலையில் சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றதை தொடர்ந்து, சுவாமி வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

பக்தர்கள் தரிசனம்

இதனை முன்னிட்டு காலையில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடனும் மற்றும் விநாயகரும் காலை 10.30 மணிக்கு கோவில் அருகே அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. இதையடுத்து திருஷ்டி பூஜை செய்யப்பட்ட பின்னர் தேரோட்டம் தொடங்கியது. இதில் சிறுகுடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் அதன் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங் கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் சிறுகுடல் கிராமத்தினர் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்