பொங்கலூர் பகுதியில்சூறாவளி காற்றில் 300 மரங்கள் முறிந்து விழுந்தன

பொங்கலூர் பகுதியில் சூறாவளி காற்றில் 300 மரங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் ஓடுகள் விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-05-18 23:31 GMT
பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளான தொங்குட்டிபாளையம், தேவணம்பாளையம், ராமம்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் இருந்த தென்னை மரங்கள், வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் மற்றும் வேப்ப மரங்கள் உள்ளிட்ட 300 மரங்கள் முறிந்து விழுந்தன.

குறிப்பாக தேவணம்பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவரது தோட்டத்தில் இருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாதியில் முறிந்தும் விழுந்தன. அங்கிருந்த மின்கம்பத்தின் மீது தென்னை மரம் ஒன்று விழுந்ததால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின்சார தடை ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரது தோட்டத்தில் இருந்த 12 தென்னை மரங்களும், நாச்சிமுத்து என்பவரது தோட்டத்தில் இருந்த 18 தென்னை மரங்களும், செட்டிபாளையத்தை சேர்ந்த குப்புசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த 27 தென்னை மரங்களும், சுப்புக்குட்டிக்கு சொந்தமான 15 தென்னை மரங்களும், செல்வராஜுக்கு சொந்தமான 6 தென்னை மரங்களும், ஜெயச்சந்திரனுக்கு சொந்தமான 10 தென்னை மரங்களும், சம்பத்துக்கு சொந்தமான வாழை மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மேலும் அந்த பகுதியில் உள்ள ஓட்டுவீடுகள், சிமெண்ட் கூரைகள் சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்டன. தொங்குட்டிபாளையத்தில் முன்னாள் ஒன்றிய தலைவர் சிவாசலத்திற்கு சொந்தமான நார் மில்லில் வேலை செய்யும் ஆட்கள் தங்குவதற்காக 16 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த வீடுகளின் மேல் பகுதியில் இருந்த சிமெண்ட் கூரைகள் பலத்த காற்றால் முற்றிலும் சேதமடைந்தன.

நல்ல வேலையாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் தேவணம்பாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சந்திரா (வயது 45) என்பவர் தனது பேரக்குழந்தையான தினேஷ்(2) உடன் வீட்டில் இருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் பக்கத்து வீட்டின் சிமெண்ட் கூரை பறந்து இவரது வீட்டின் மீது விழுந்தது. இதனால் வீட்டின் ஓடுகள் நொறுங்கி கீழே விழுந்தன. இதில் சந்திராவும், அவரது பேரன் தினேசும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த இருவரும் மீட்கப்பட்டு பொங்கலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பொங்கலூர் செல்லும் வழியில் கோவில் அருகே இருந்த ஒரு வேப்ப மரம் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் பொங்கலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது.

வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. கடும் வறட்சியிலும் காப்பாற்றி வைத்திருந்த தென்னை மரங்கள் சூறாவளி காற்றால் ஒரே நாளில் பெரும் இழப்பை ஏற்படுத்தியது விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதே போல் பல்லடம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் பல்லடம் பட்டேல் வீதியில் பிரசித்தி பெற்ற அருளானந்தர் ஈஸ்வரன் கோவிலில் உள்ள மூலஸ்தான கோபுரத்தின் மீது இருந்த கலசம் கீழே விழுந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் கலசத்தை எடுத்து வைத்து கொண்டு இது குறித்து மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கோவில் அதிகாரி அங்கு வந்து பொதுமக்கள் வைத்திருந்த கலசத்தை வாங்கி சென்றனர். அப்பகுதி மக்கள், பலத்த காற்றுக்கு கீழே விழுந்த கலசத்துக்கு பதிலாக புதிதாக ஒரு கலசத்தை கோவில் மூலஸ்தான விமான கோபுரத்துக்கு வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்