கோபி அருகே பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை நண்பர்களுக்கு வலைவீச்சு

கோபி அருகே கல்லால் தாக்கி வாலிபரை கொன்றதாக அவருடைய நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-19 23:00 GMT
கடத்தூர்,

கோபி அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் மயில்சாமி (வயது 22). மெக்கானிக். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற மயில்சாமி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை அக்கம் பக்கம் மற்றும் தெரிந்த இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள கோபி-கொளப்பலூர் ரோட்டின் ஓரத்தில் ஒரு மரத்தின் கீழ் தலையில் ரத்தக் காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்தப்பகுதியில் இறைச்சிக்கடைக்கு கோழிகளை ஏற்றிவந்தவர்கள் பார்த்தார்கள். உடனடியாக அவர்கள் இதுபற்றி கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த மெக்கானிக் மயில்சாமி என்பதும், அவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி சம்பவ இடத்துக்கு வந்து, மயில்சாமியின் உடலை பார்வையிட்டார். இதேபோல் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் மயில்சாமி இறந்து கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்றது. பின்னர் யாரையும் கவ்விப்பிடிக்காமல் அங்கேயே நின்றுவிட்டது.

கொலை செய்யப்பட்ட மயில்சாமியின் உடல் அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. மயில்சாமி நண்பர்கள் சிலருடன் மது அருந்தியிருக்கலாம். அப்போது தகராறு ஏற்பட்டு உடன் இருந்த நண்பர்களே மயில்சாமியை கல்லால் தாக்கி, மேலும் அவரின் தலையை அருகே இருந்த மரத்தில் மோதி கொலை செய்திருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார், மயில்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மயில்சாமியை அடித்துக்கொலை செய்த அவரின் நண்பர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

நண்பர்களுடன் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் மெக்கானிக் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்