கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடை பிடித்தபடி நூதன ஆர்ப்பாட்டம் முதியவர் தீக்குளிக்க முன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடைபிடித்தபடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-20 23:00 GMT

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் தேர்தல் காரணமாக ரத்து செய்யப்பட்ட போதிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள புகார் பெட்டியில் புகார் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் அமைப்புசாரா விவசாயிகள் உழவர் பேரவையை சேர்ந்த விவசாயிகள் பலர் குடைபிடித்த படியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடியும் கலெக்டர் அலுவலகத்துக்குள் ஊர்வலமாக வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை, பணி நெருக்கடி அதிகமாக உள்ளது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

பணி பாதுகாப்பு, பணி நேரம் வரையறை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் பட்டியல் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஒட்ட வேண்டும். ஏனெனில் இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சாலையோர சிறுகடை வியாபார தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் கொண்டு வந்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் திருவண்ணாமலை நகராட்சி மூலமாக பயோமெட்ரிக் அடையாள அட்டை பெற்று, அதன் அடிப்படையில் சாலையோரங்களில் கடை வைத்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் எங்களது கடைகளை அப்புறப்படுத்துகின்றனர். மேலும் நாங்கள் உபயோகிக்கும் பொருட்களை தூக்கி எறிகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது பொருட்களை சேதப்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல கலெக்டர் கார் நிறுத்தும் போர்டிகோ அருகே முதியவர் ஒருவர் திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றினார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று பெட்ரோல் கேனை தட்டி விட்டனர்.

இதனையடுத்து அந்த முதியவர் சட்டை பாக்கெட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து தீ பற்ற வைக்க முயன்றார். உடனே போலீசார் அதை தடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து அவர் மீது ஊற்றினர்.

பின்னர் முதியவர் போலீசாரிடம் கூறியதாவது:–

எனது பெயர் குழந்தைவேலு (வயது 63). திருவண்ணாமலை தாலுகா கீழ்செட்டிபட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், பொன்குமார் (28) என்ற மகனும் உள்ளனர். நான் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறேன். எனது மகன் பொன்குமார் எனக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தை தன் பெயரில் எழுதி வைக்கும்படி கொடுமைப்படுத்துகிறான். அவ்வப்போது அடித்து துன்புறுத்தி, ஆபாசமாக பேசுகிறான். வீட்டை விட்டு துரத்திவிட்டான். இவை எல்லாம் எனது மனைவியின் சொல்பேச்சை கேட்டு செய்கிறான்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனமுடைந்த நான் இங்கு தீக்குளிக்க வந்தேன். எனவே எனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி முதியவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்