சதி திட்டம் தீட்ட ரகசிய கூட்டம் நடத்திய வழக்கு: கைதான 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

முத்துப்பேட்டையில், சதி திட்டம் தீட்ட ரகசிய கூடடம் நடத்திய வழக்கில் கைதான 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-20 23:15 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தென்னை மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் சாஜித் அகமது, நண்டு மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் இம்தியாஸ் அகமது, நெய்யக்கார தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான்.

இவர்கள் 3 பேரும் கடந்த 2018–ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடந்த இந்து பிரமுகர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இவர்கள் சில சதி திட்டம் தீட்ட முத்துப்பேட்டையில் ரகசிய கூட்டம் நடத்தியதாகவும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.


இந்த நிலையில் நேற்று அதிகாலை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், ஏற்கனவே சதி திட்டம் தீட்ட ரகசிய கூட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சாஜித் அகமது, இம்தியாஸ் அகமது, ரிஸ்வான் ஆகியோர் வீடுகளில் அதிகாலை 5 மணிக்கு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.


ரமலான் மாதத்தில் அதிகாலையில், முஸ்லிம்கள் நோன்பு வைக்கும் நேரம் என்பதால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையை பார்த்த முஸ்லிம்கள் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூடினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த பகுதிகளில் திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப், திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நண்பகல் 12 மணி வரையில் தொடர்ச்சியாக 7 மணி நேரம் நடந்தது. சோதனையை முடித்துக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் மூன்று பேரின் வீடுகளிலும் இருந்து புறப்பட்டு சென்றனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையால் முத்துப்பேட்டையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்