சேலம் சத்திரம் பகுதியில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் மது அருந்தும் கும்பல்

சேலம் சத்திரம் பகுதியில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் அமர்ந்து சிலர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2019-05-20 22:15 GMT
சேலம், 

சேலம் பெரியார் மேம்பாலம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகளும், சத்திரம் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையும் உள்ளன. இதில் சத்திரம் தவிர, மற்ற 2 கடைகளில் மது அருந்துவதற்கு பார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி செல்லும் பெரும்பாலான மது பிரியர்கள், அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு போதையில் தண்டவாளம் பகுதியில் படுத்து அயர்ந்து உறங்கி விடுவதும், அந்த சமயத்தில் அவ்வழியாக வரும் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்துவிடும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதுதவிர, பகல் நேரங்களிலும் இளைஞர்கள் மது வாங்கி வந்து ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் ‘ஹாயாக’ அமர்ந்து மது குடித்து வருவதாகவும், எனவே, ரெயில்வே போலீசார் இந்த பகுதிக்கு வந்து தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சேலம் சத்திரம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இளைஞர்களும், பெரியவர்களும் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ரெயில் வருவது கூட தெரியாமல் சிலர் இருப்பதால் ரெயிலில் அடிபட்டு உயிர்பலி ஏற்படுகிறது. இருபுறத்திலும் தடுப்புச்சுவர் கட்டியும், ஒரு சிலர் அந்த சுவர்களை சேதப்படுத்தி கடந்து செல்கிறார்கள். ஆனால் ரெயில்வே போலீசாரும், செவ்வாய்பேட்டை போலீசாரும் கண்டுகொள்வது இல்லை. எனவே, ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்