திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-05-20 22:30 GMT
திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு புராதனவனேஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்றது.

கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் புராதனவனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 18 ஆண்டுகளாகியும் திருப்பணிகள் தொடங்கப்படவில்லை. வழக்கமாக நடைபெற்று வந்த வைகாசி விசாக திருவிழாவும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.

கோவிலின் வர்ண பூச்சுகளும் மங்க தொடங்கி விட்டன. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள சிற்பங்கள் சிதிலம் அடைந்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவில் முகப்பில் இருந்த கொடி மரம் முறிந்து விழுந்து விட்டது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கோவில் கொடிமரம் இன்றி காட்சி அளிக்கிறது.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் கோவிலில் செய்யப்படவில்லை. கோவிலின் வட பகுதியில் உள்ள திருக்குளத்தின் கரையில் இரவு நேரங்களில் மது அருந்துவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கோவில் வளாகம் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோவிலில் திருப்பணிகளை உடனடியாக தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் செய்திகள்