பொள்ளாச்சி பாலியல் வழக்கு, சபரிராஜன் வீட்டில் மீண்டும் சி.பி.ஐ. சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சபரிராஜன் வீட்டில் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2019-05-20 23:15 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த மாதம் 28-ந் தேதி சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10-ந் தேதி சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுக்கு சொந்தமான வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் 4¼ மணி நேரம் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம், திருநாவுக்கரசின் வீட்டிற்கு பெண்களை அழைத்து வருவது தெரியுமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் பாலியல் வழக்கில் கைதான சபரிராஜன் வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு நேற்று மதியம் 3.15 மணிக்கு சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் கருணாநிதி உள்பட 2 அதிகாரிகள் வந்தனர். அவர்கள் நுழைவு வாயிலை உள்புறமாக பூட்டி விட்டு, வீட்டிற்குள் சென்றனர். பின்னர் வீட்டின் கதவையும் உள்புறமாக பூட்டிக்கொண்டு சபரிராஜனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீடு முழுவதும் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், மேலும் சில தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்ததாக தெரிகிறது.

பின்னர் விசாரணையை முடித்துக்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் மாலை 3.50 மணிக்கு வெளியே வந்து காரில் ஏறி சென்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நபர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். மேலும் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு விட்டது. அடுத்தக்கட்டமாக சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் வீடுகளில் சோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளதால், இந்த வழக்கில் மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்