புயல்-இயற்கை சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அலையாத்தி தோட்டங்களை உருவாக்க நடவடிக்கை

புயல் மற்றும் இயற்கை சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அலையாத்தி தோட்டங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-05-20 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறையின் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறையின் சார்பில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுவளர்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனமில்லா இடங்களை கண்டறிந்து அவற்றை வனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில் புயல் மற்றும் இயற்கை சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சவுக்கு தோட்டம் மற்றும் அலையாத்தி தோட்டங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக தகுதியான இடங்களை கண்டறிந்து தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் கிராமங்களின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குளம் தூர்வாருதல், சாலை மேம்பாடு, கிணறு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், சமுதாயக் கூடம் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் வனத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிற துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி ஆனந்த்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்