கயத்தாறு அருகே லாரி மீது கார் மோதல்; வியாபாரி உள்பட 6 பேர் படுகாயம்

கயத்தாறு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-05-21 22:00 GMT
கயத்தாறு,

சென்னை காமகோபுநகரை சேர்ந்தவர் பீட்டர் லிவர் (வயது 43). வியாபாரி. இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு காரில் குடும்பத்துடன் வந்திருந்தார். பின்னர் நேற்று காலை அதே காரில் பீட்டர் லிவர், அவருடைய தந்தை பீட்டர் பால்ராஜ் (72), தாய் ஹில்டா (72), பீட்டர் லிவரின் மனைவி ரூபி கிறிஸ்டி (40), மகன் லாரிஸ் (14), மகள் லின்சி (6) ஆகிய 6 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். காரை பீட்டர் லிவர் ஓட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் விலக்கு நாற்கர சாலையில் சென்றபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரை தாண்டி மற்றொரு சாலையில் ஓடியது.

அப்போது அந்த பகுதியில் சேலத்தை சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வந்த லாரி மீது அந்த கார் பயங்கரமாக மோதியது.

இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த பீட்டர் லிவர் உள்பட 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்