சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.83¼ லட்சம் 2 கிலோ தங்கமும் கிடைத்தது

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.83¼ லட்சமும், 2 கிலோ தங்கமும் கிடைத்தது.

Update: 2019-05-21 22:30 GMT
சமயபுரம்,

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். பவுர்ணமி, அமாவாசை, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் விஜயராணி, உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் க.ஞானசேகரன், கோவில் மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணப்பாறை கோவில் ஆய்வாளர் பிரேமலதா ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

ரூ.83¼ லட்சம்

இதில், காணிக்கையாக ரூ.83 லட்சத்து 37 ஆயிரத்து 782-ம், 2 கிலோ 262 கிராம் தங்கமும், 9 கிலோ 659 கிராம் வெள்ளியும், மேலும் வெளிநாட்டு பணம் 64 கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அம்மன் அருள், ஆத்ம சங்கம், அய்யப்ப சேவா சங்கத்தை சேர்ந்தவர்களும், சமயபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்