திருச்சி தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை

திருச்சி தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர்.

Update: 2019-05-21 23:00 GMT
திருச்சி,

திருச்சி மன்னார்புரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம், மளிகை பொருட்களை ஆன்-லைனில் விற்பது உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ராஜா, ரமேஷ்குமார் ஆகியோர் உள்ளனர். மேலும் ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வர்த்தக பிரிவு மாநில துணை செயலாளராகவும், அதே கட்சியில் ரமேஷ்குமார் அச்சு ஊடக பிரிவு மாநில துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி பெரம்பலூர் அருகே காரில் கதவுகளில் மறைத்து ரூ.2 கோடி எடுத்து செல்லப்பட்ட போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போலீசார் சோதனையில் சிக்கினர். நாடாளுமன்ற தேர்தல் பிரசார நேரத்தில் அந்த பணம் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பணம் எடுத்துச்செல்லப்பட்ட கார் ரமேஷ்குமாருக்குரியது என்பதும், அந்த பணம் அவருக்குரியது தான் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திருச்சி மன்னார்புரத்தில் இயங்கி வரும் அவரது நிறுவனத்தில் அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அந்த பணம் தன்னுடையது தான் என ரமேஷ்குமார் ஒப்புக்கொண்டார். மேலும் அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்வதாக கூறினார்.

இந்த நிலையில் இவரது நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். பகல் 12 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். மேலும் வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. கடந்த முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது சில ஆவணங்களை அலுவலகத்தில் வைத்து ‘சீல்’ வைத்துள்ளனர். அந்த ஆவணங்களை சோதனையிட நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த நிறுவனத்தின் இயக்குனர் ராஜா, அறம் மக்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். மாநில பொதுச்செயலாளராக ரமேஷ்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி சமீபத்தில் திருச்சியில் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியின் எதிரொலியாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று இரவு 7 மணி அளவில் முடிவடைந்தது. இந்த சோதனைக்கு பின் ஆவணங்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை நிறுவனத்தினரிடமே வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்துவிட்டதாக நிறுவன தரப்பில் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்