ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2019-05-21 22:39 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அச்சமங்கலம் பகுதியில் உள்ள 2 தெருக்களில் மேல் தெருவுக்கு மட்டும் தேவைக்கு அதிகமாக குடிநீர் வினியோகிக்கப்படுவதாகவும், ஊராட்சி நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ளவர் வசிப்பதால் இவ்வாறுதேவைக்கு அதிகமாக குடிநீர் அங்கு எடுத்துக்கொள்வதோடு கீழ் தெருவுக்கு குடிநீரே கிடைக்காமல் உள்ளது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்த அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் குடிநீர் வசதி வேண்டியும் காலிக்குடங்களுடன் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் பள்ளிக்கூட பஸ்சை அவர்கள் சிறைபிடித்தனர். இதனால் காலை 7 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி தலைமையில் போலீசாரும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்