பிக்பாக்கெட் திருடன் அடித்துக்கொலை பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறா? கூட்டாளியிடம் விசாரணை

நாகர்கோவிலில் பிக்பாக்கெட் திருடன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். பணத்தை பங்கு பிரிப்பதில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து கூட்டாளி ஒருவரிடம் விசாரணை நடத்தினர்.

Update: 2019-05-22 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே, பழைய நகராட்சி கலையரங்க கட்டிடத்தின் (தற்போது இடிக்கப்பட்டுள்ளது) எதிரே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நூலகம் அமைந்துள்ளது.

நேற்று காலையில் ஊழியர் ஒருவர் நூலகத்தை திறக்கச் சென்றார். வெளிப்பகுதி கேட்டை திறந்து உள்ளே சென்றபோது உள்பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி, ரத்தக்காயத்துடன் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை, பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

வாலிபர் பிணம்

பின்னர் அவரைப்பிடித்து வைத்துக்கொண்டு அங்குள்ள மண்டப பகுதிக்கு சென்று பார்த்தபோது இன்னொரு வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நூலக ஊழியர் இதுகுறித்து போலீசாருக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதற்குள் நூலக வளாகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதனால் ஏராளமானோர் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை வந்து பார்த்துச் சென்றனர்.

இதற்கிடையே வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகர்கோவில் நாகராஜா கோவில் மேலாளர் ரமேஷ்குமாரும் அங்கு வந்து பார்வையிட்டார்.

போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை

பின்னர் போலீசார், நூலக ஊழியர் பிடித்து வைத்திருந்த நபரை சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மற்றும் பிடிபட்ட வாலிபரின் பெயர் விவரங்கள் தெரிய வந்தன. அதன் விவரம் வருமாறு:-

பிக்பாக்கெட் திருடர்கள்

பிணமாக கிடந்தவர் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 31) ஆவார். ரத்தக்காயத்துடன் பிடிபட்டவர் கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டத்தை சேர்ந்த ஜான் (35) ஆவார். இவர்கள் 2 பேருமே பிக்பாக்கெட் திருடர்கள். இவர்கள் மீது நாகர்கோவில் வடசேரி, கோட்டார், ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் வடசேரி பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு அடித்த பிக்பாக்கெட் பணத்தை பங்கு பிரிப்பதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படம் முடிந்த பின்னரும் அவர்கள் தகராறு செய்தபடியே வெளியே வந்துள்ளனர். பின்னர் அவர்கள் சிவகுமார் பிணமாக கிடந்த நூலகத்தின் இரும்புகேட் வழியாக ஏறிக்குதித்து உள்ளே சென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

அங்கும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஜான், சிவகுமாரை தரையில் அல்லது மண்டபத்தின் தூணில் தலையை மோதச்செய்தோ அல்லது கட்டை மற்றும் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜானுக்கு மதுபோதை தெளிந்தபிறகு அவரிடம் விசாரணை நடத்தினால்தான் சிவகுமார் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் நூலகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜானிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்