துப்பாக்கி சூடு முதலாம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடி செல்ல இருந்த சுப.உதயகுமார் கைது

துப்பாக்கி சூடு முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடி செல்ல இருந்த சுப.உதயகுமாரை நாகர்கோவிலில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-22 22:45 GMT
நாகர்கோவில்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22-ந் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

சுப.உதயகுமார் கைது

இதேபோல் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனருமான சுப.உதயகுமார், தூத்துக்குடியில் நடைபெறும் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை நாகர்கோவில் கோட்டார் இசங்கன்விளையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அவர் தூத்துக்குடி செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். அவரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர் போலீஸ் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு இருந்தார். மாலையில் விடுவிக்கப்பட்டார்.

மாவட்ட தலைவர்

இதேபோன்று பச்சை தமிழகம் கட்சியின் குமரி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியனையும் போலீசார் நேற்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்