நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிதேர்தல், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது.

Update: 2019-05-22 22:15 GMT
தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய நிலையில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடக்கும் இன்று சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் 336 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஒரு மேஜை அமைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன. நேற்று அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது.

இதற்காக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இருந்தனர். அங்கு சட்டமன்ற தொகுதி வாரியாக மேஜைகள் அமைக்கப்பட்டு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மூலமாக பணி உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த பணி உத்தரவு பெற்ற அலுவலர்கள் இன்று காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அலுவலர்கள் எந்த மேஜையில் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது இன்று அதிகாலை 5.30 மணியளவில் கணினி மூலம் முடிவு செய்யப்படும். அதுகுறித்து வாக்கு எண்ணும் மையத்தில் அலுவலர்களுக்கு உரிய தகவல்கள் கொடுக்கப்படும்.

வாக்கு எண்ணும் பணி தொடர்பாக மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவுடன் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் பிரபாகர ரெட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் சரளா ராய் மற்றும் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது பார்வையாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வெற்றி பெறுபவர் யார் என்பது பிற்பகலில் தெரிந்து விடும். அதே நேரத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 5 ‘விவிபேட்’ எந்திரங்களில் பதிவாகி உள்ள ஒப்புகை சீட்டுகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், அந்த பணிகள் முடிந்த பின்னரே வெற்றி பெற்றவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இரவு ஆகிவிடும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்