தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2019-05-22 23:00 GMT
நெல்லை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, ஏற்பட்ட கலவரத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு முடிவடைந்ததையொட்டி நேற்று முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பலியானவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் வீரவணக்க கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகில் தமிழர் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர் பேரவை, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வக்கீல்கள் ரமேஷ், அரசு அமல்ராஜ், சிவசூரியநாராயணன், செந்தில்குமார், பழனி, சுதர்சன், மணிகண்டன், அப்துல்ஜப்பார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

மேலப்பாளையத்தில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் முன்பு கட்சியினர் மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்