மேச்சேரி, ஜலகண்டாபுரம் பகுதிகளில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

மேச்சேரி, ஜலகண்டாபுரம் பகுதிகளில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

Update: 2019-05-25 22:15 GMT

மேச்சேரி, 

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சின்ன அரங்கனூர் பிரிவு ரோடு அருகில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மேடான பகுதியாகும். எனவே குடிநீர் சீராக வினியோகம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணியளவில் சின்ன அரங்கனூர் பிரிவுரோட்டில் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ஓமலூரில் இருந்து அரங்கனூர் வழியாக மேச்சேரி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் அய்யந்துரை, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தொட்டி அமைத்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தனர். இதையடுத்து காலை 9.30 மணியளவில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதி மேடாக உள்ளதால் எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வருவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டோம். இதுபற்றி அதிகாரிகளிடம் மனு கொடுத்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் சாலைமறியலில் ஈடுபட்டோம், என்றனர்.

ஜலகண்டாபுரம் அருகே ஆவத்தூர் கிராமம் கட்டிநாயக்கன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் எடப்பாடி ரோட்டில் கட்டிநாயக்கன்பட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் நேற்று காலை 9 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சி செயலாளர் ஞானதுரை, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்