சங்ககிரி அருகே விபத்து: ஓடும் மினி பஸ் மீது மரக்கிளை விழுந்து டிரைவர் பரிதாப சாவு

சங்ககிரி அருகே, ஓடும் மினி பஸ் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

Update: 2019-05-26 22:00 GMT

சங்ககிரி, 

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெள்ளநாயக்கன்பாளையம் மோட்டூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). மினி பஸ் டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள ஒரு நூல் மில்லில் மினி பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு நூல் மில்லில் இருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு எடப்பாடிக்கு வந்தார். அங்கு பணியாளர்களை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட பின்னர் வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு விட்டு மீண்டும் வெப்படை நோக்கி புறப்பட்டார்.

இரவு 9.15 மணியளவில் சங்ககிரி அருகே கள்ளுக்கடை என்ற இடத்தில் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு புளியமரத்தின் கிளை முறிந்து மினி பஸ் மீது விழுந்தது. இதில் மினி பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் பஸ்சின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இதில் குமார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார்

பலியான குமாருக்கு அலமேலு என்ற மனைவியும், கார்த்திகா, ரேணுகா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். தகவல் அறிந்ததும் குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். குமார் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்