தஞ்சையில் விஷவாயு தாக்கி மூதாட்டி சாவு கழிவுநீர் தொட்டியை திறந்தபோது பரிதாபம்

தஞ்சையில் கழிவுநீர் தொட்டியை திறந்தபோது விஷவாயு தாக்கி மூதாட்டி இறந்தார்.

Update: 2019-05-26 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் தைக்கால் தெருவில் வசித்து வந்தவர் நடராஜன். இவருடைய மனைவி மல்லிகா(வயது62). இவர் வீட்டில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் பாதாள சாக்கடை குழியில் சென்று சேருகிறது. வீட்டில் இருந்து கழிவுநீரானது பாதாள சாக்கடை குழிக்கு நேரடியாக செல்லாமல் முதலில் வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுகிறது. அந்த தொட்டியில் இருந்து குழாய் வழியாக பாதாள சாக்கடை குழிக்கு கழிவுநீர் செல்கிறது. பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் செல்ல வழியில்லை. இதனால் தொட்டியில் கழிவுநீர் நிரம்பி வழிந்ததால் துர்நாற்றம் வீசியது. கழிவுநீர் தொட்டியில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டு இருக்குமோ? என நினைத்த மல்லிகா நேற்றுகாலை கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தார். அப்போது தொட்டியில் இருந்து வாயு வெளியேறியது. இதை சுவாசித்த மல்லிகாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

உடனே தடுமாறிய நிலையிலேயே நடந்து வந்த அவர், வீட்டிற்குள் சென்று படுத்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து மல்லிகாவை அவரது மகன் பழனி எழுப்பியபோது எந்த அசைவும் இன்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள், மல்லிகாவை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் பிரேத பரிசோதனை என கூறி மல்லிகாவின் உடலை எடுத்து சென்றுவிடுவார்கள் என கருதி முதலில் போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் விஷவாயு தாக்கி மூதாட்டி இறந்துவிட்டார் என்ற தகவல் தஞ்சை நகர் முழுவதும் பரவியது. இதை அறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மல்லிகாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எந்த புகாரும் வேண்டாம் என மல்லிகாவின் உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் புகார் இல்லாமலும், பிரேத பரிசோதனை செய்யாமலும் உடலை ஒப்படைக்க முடியாது என போலீசார் உறுதியாக தெரிவித்தனர்.

இதையடுத்து மல்லிகாவின் மகன் பழனி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மல்லிகாவின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்