குடிநீர் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி மயிலம் அருகே பரிதாபம்

மயிலம் அருகே குடிநீர் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய சிறுமி பரிதாபமாக பலியானாள்.

Update: 2019-05-26 22:45 GMT
மயிலம்,

மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 33), கிரேன் ஆபரேட்டர். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு 5 வயதில் சாகித்யா என்ற பெண் குழந்தை இருந்தது. செண்டூர் பகுதியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கன்னியப்பன் தனது வீட்டுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்தார்.

அதன்படி அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம்(32) என்பவர் நேற்று காலை தனது டிராக்டர் டேங்க் மூலம் கன்னியப்பன் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது சிறுமி சாகித்யா டிராக்டரின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இதையடுத்து கன்னியப்பன் தண்ணீர் பிடித்து முடித்ததும், சாகித்யா விளையாடிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் ஏகாம்பரம் டிராக்டரை பின்னோக்கி இயக்கினார். இதில் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிய சாகித்யா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கன்னியப்பன், இலக்கியா ஆகியோர் சாகித்யாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சாகித்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாகித்யாவின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் டிரைவர் ஏகாம்பரத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்