பொள்ளாச்சி அருகே மீண்டும் சம்பவம்: காட்டுயானை தாக்கி தொழிலாளி சாவு

பொள்ளாச்சி அருகே நவமலையில் காட்டுயானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-05-26 23:00 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் நவமலைபதி பகுதியில், 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்குள்ள கூலித்தொழிலாளி மாகாளி (வயது 55) என்பவர் தனது குடிசை வீட்டின் வாசலில் காற்று வாங்குவதற்காக அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு திடீரென வேகமாக வந்த ஒரு காட்டு யானை தனது துதிக்கையால் மாகாளியை பிடித்து ஆக்ரோஷமாக தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யானை தூக்கி வீசும் போது மாகாளி போட்ட கூச்சல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி வனசரகர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாகாளியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும், உணவு பொருட்களை தின்று, சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் அந்த பகுதி மக்கள் உயிருக்கு பயந்து வாழும் நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

வனத்துறை மற்றும் அதிகாரிகளிடம் காட்டுயானைகள் நடமாட்டம் குறித்து பல முறை கூறியும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 24-ந் தேதி இரவு காட்டு யானைதாக்கி எங்கள் பகுதியை சேர்ந்த 7 வயது பள்ளி மாணவி இறந்து போனாள். இதனை தொடர்ந்து மறுநாள் (25-ந்தேதி) நள்ளிரவில் யானை தாக்கி மாகாளி இறந்துவிட்டார். இரண்டு உயிர்கள் பலியாகி உள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே பலி வாங்கிய யானைகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு முழுமையான இழப்பீடு தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

காட்டு யானை தாக்கி மீண்டும் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானைகளை விரட்ட வனசரகர் காசிலிங்கம் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்