காங்கிரசுடனான கூட்டணியால் தேவேகவுடா தோல்வி அடைந்தார் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு

காங்கிரசுடனான கூட்டணியால் தேவேகவுடா தோல்வி அடைந்தார் என்று ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. கூறினார். அவருடைய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-05-26 22:06 GMT
பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா துமகூரு தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தோல்வி குறித்து ஆலோசிக்க ஜனதா தளம் (எஸ்) கட்சியின் துமகூரு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று துமகூருவில் நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த கவுரிசங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

துமகூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி வைத்ததே அவரது தோல்விக்கு காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால், 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். இந்த கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதாவினர் அடிக்கடி கூறி வருகிறார்கள்.

கூட்டணி அரசை பணியாற்ற விடாமல் பா.ஜனதாவினர் தடுக்க முயற்சி செய்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு சென்றுவிட்டனர், அங்கு சென்றுவிட்டனர், இங்கு சென்றுவிட்டனர் என்று செய்திகளை பரப்பினர். இதனால் மாநில அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். எனவே, காங்கிரசுடன் கூட்டணி தேவை இல்லை. இந்த கருத்துக்காக என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை. இவ்வாறு கவுரிசங்கர் பேசினார்.

மேலும் செய்திகள்