தூங்கி கொண்டிருந்தவர் தலையை துண்டித்து கொலை: 9 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த கொலையாளிகள் 7 பேருக்கு வலைவீச்சு

மதுரையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 ஆண்டுகள் காத்திருந்து கொலையாளிகள் பழி தீர்த்துள்ளனர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-05-27 00:00 GMT

மதுரை,

மதுரை திருநகரை சேர்ந்தவர் சவுந்தர் என்கிற சவுந்திரபாண்டியன் (வயது 43). இவர் நேற்று முன்தினம் முத்துப்பட்டியில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த சவுந்தரை ஒரு கும்பல் படுகொலை செய்தது. மேலும் அந்த கும்பல், அவரது தலையை துண்டித்து எடுத்து சென்று பழங்காநத்தம் பாலம் அருகில் போட்டு சென்றது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கொடூர கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:–

கொலை செய்யப்பட்ட சவுந்தர் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு மதுரை மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் நடந்த கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது. கடந்த 2010–ம் ஆண்டு ஜெய்ஹிந்த்புரத்தில் நேருபாண்டியன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சவுந்தர் தான் முக்கிய குற்றவாளி.

இந்த கொலைக்கு பழிவாங்க நேருபாண்டியனின் உறவினர் பிள்ளையார் கணேசன் என்பவர் காத்திருந்தார். முதலில் திருநகரில் வசித்து வந்த சவுந்தர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிகொண்டே இருந்தார். இந்தநிலையில் வண்டியூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுந்தர் குடியேறினார். இந்த தகவல் பிள்ளையார் கணசனுக்கு தெரியவந்தது. எனவே அவர், சவுந்தரை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

அப்போது தான் சவுந்தர் முத்துப்பட்டியில் உள்ள அத்தை வீட்டுக்கு வந்தது தெரிந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிள்ளையார் கணேசன் தனது கூட்டாளிகளுடன் சென்று சவுந்தரை படுகொலை செய்துள்ளார். இருப்பினும் அவர்கள் ஆத்திரம் அடங்காததால், அவரது தலையை துண்டாக வெட்டி எடுத்து சென்றனர். 9 ஆண்டுகள் காத்திருந்து பிள்ளையார் கணேசன் இந்த கொலையை அரங்கேற்றியதாக போலீசார் கூறுகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக பிள்ளையார் கணேசன், பாட்டில் மணி, தமிழ்ச்செல்வன், குண்டு மணி உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்