புதுச்சேரியில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது; கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

புதுச்சேரியில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. மாலையில் கடற் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2019-05-26 23:55 GMT
புதுச்சேரி,

கோடைகாலமான தற்போது புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கமாக இந்த கோடைகாலத்தில் அவ்வப்போது கோடை மழை பொழிவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு கோடை மழை எதுவும் பெய்யாததால் வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டுகளைவிட அதிக அளவில் உணரப்படுகிறது.

கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் முடிய உள்ளது. இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் அனல் காற்றும் வீசியது.

புதுவையில் நேற்று 102.2 டிகிரியாக வெயில் அளவு பதிவாகியிருந்தது. அதனால் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டனர். வெயிலின் உக்கிரம் காரணமாக மதிய வேளையில் ரோடுகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. 2 சக்கர வாகனங்களில் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் குளிர் கண்ணாடி, தொப்பி அணிந்தே சென்றனர்.

பள்ளிக்கூட விடுமுறையாக இருந்தபோதிலும் வெயில் அதிகமாக உணரப்பட்டதால் மாணவ, மாணவிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். மாலையில் அவர்கள் காற்று வாங்குவதற்காக கடற்கரையில் திரண்டனர். இதனால் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பழச்சாறுகள், வெள்ளரிப்பழம், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடுபிடித்தது.

வெயிலின் தாக்கம் நேற்று அதிகமாக இருந்த போதிலும் புதுச்சேரியின் மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரிக்கு டிக்கெட் எடுத்து படகில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்