மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து மின்துறை தலைமை அலுவலகம் முன்பு மின்சாதன பொருட்களை உடைத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2019-05-27 23:00 GMT
புதுச்சேரி,

புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு மின்கட்டணம் 4.59 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி பா.ஜ.க.வினர் நேற்றுகாலை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் அலுவலக நுழைவு வாயிலை இழுத்து மூடி போராட்டம் நடத்தினர்.

அவர்கள் வாஷிங் மெஷின், மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை தரையில் தூக்கிப்போட்டு உடைத்தனர். மகளிர் அணியை சேர்ந்தவர்கள் கையில் லாந்தர் விளக்குகளை ஏந்தியும், தீப்பந்தங்களை ஏந்தியும், அம்மியில் மசாலா அரைத்தும் நூதன முறையில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கர் எம்.எல்.ஏ, கட்சியின் பொதுச்செயலாளர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்