குமராட்சி அருகே, காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

குமராட்சி அருகே காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2019-05-28 22:30 GMT
காட்டுமன்னார்கோவில்,

குமராட்சி அருகே உள்ள ஆட்கொண்டநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஊர் ராதாநல்லூர். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

மேலும் கடந்த சில நாட்களாக குடிநீரில் உவர் தன்மை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இருப்பினும், குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8 மணிக்கு ராதாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என கூறினர்.

பின்னர் இது பற்றி போலீசார் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது விரைவில் குடிநீர் வழங்கவும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்