அனுமதியின்றி பள்ளி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

அனுமதியின்றி பள்ளி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-05-28 22:45 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய பகுதி அலுவலகங்கள் கட்டுப்பாட்டில் 935 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வாகனங்களை ஆய்வு செய்ய பள்ளி வாகன ஆய்வுக்குழுவினர் முடிவு செய்தனர். இதன்படி நேற்று 935 பள்ளி வாகனங்களும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்களின் ஆவணங் களை சரிபார்த்து ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து பள்ளி வாகன ஜன்னல்களில் கிரில் பொருத்தப்பட்டு உள்ளதா? முதலுதவி பெட்டி உள்ளதா? தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா? பள்ளி வாகனத்தை வேறுபடுத்தி காட்ட மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு உள்ளதா? பள்ளி குழந்தைகள் சின்னம் பொருத்தப்பட்டு உள்ளதா? பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண் வாகனத்தில் எழுதப்பட்டு உள்ளதா? போன்ற 14 வகையான ஆய்வுகளை பள்ளி வாகன ஆய்வுக்குழுவினர் மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாவட்டத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் மொத்தம் 935 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் தரமாக, பாதுகாப்பாக உள்ளதா? குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியாக உள்ளதா? என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறோம்.

குழந்தைகளின் பாதுகாப்பு மிக, மிக முக்கியம். பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். வாகனத்தின் ஜன்னல்களில் கிரில் பொருத்தப்பட்டு உள்ளதா? முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். தீயணைப்பு கருவி பயன்படுத்த தகுதியாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தோம்.

அவசர காலங்களில் பயன்படுத்தும் கதவு வாகனத்தில் உள்ளதா? ஓட்டுனர் உரிமம், காப்புச்சான்று, தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு, வாகனத்தின் தொழில்நுட்ப திறன், ஓட்டுனர்களின் உடல் தகுதி போன்ற பல்வேறு ஆய்வுகளை செய்தோம். ஆய்வு செய்த வாகனங்கள் மட்டுமே பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல முடியும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அனுமதியின்றி பள்ளி வாகனங்களை இயக்கினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த குறைபாடுகளை ஒரு வாரத்துக்குள் அவர்கள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தினால் தான் அந்த வாகனங்களை இயக்க முடியும். அதேபோல் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் தனியார் வேன், ஆட்டோ போன்ற வாகனங்களும் கண்காணிக்கப்படும். அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார், அரசு பள்ளிகளில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளியை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

முன்னதாக தீ விபத்து ஏற்பட்டால் அதை உடனடியாக எப்படி? அணைக்க வேண்டும் என்று பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். மேலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றியும் டிரைவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

ஆய்வின் போது கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) முக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், வெங்கடகிருஷ்ணன், ரவிச்சந்திரன், செல்வம், ராஜேஷ்கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்