வல்லத்தில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர்-மனைவி படுகாயம்

வல்லத்தில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரும், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2019-05-29 22:15 GMT
வல்லம்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சோழகம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 58). இவர் அதே ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி அன்னக்கிளி(50). இவர்கள் இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாதந்தோறும் சென்று மருந்துகள் வாங்கி வருவார்கள்.

அதன்படி இந்த மாதத்திற்கு மருந்துகள் வாங்குவதற்காக நேற்று பெரியசாமி மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

கணவன்-மனைவி படுகாயம்

வல்லம் பஸ் நிலையம் அருகே உள்ள அய்யனார் கோவில் எதிரே மருத்துவக்கல்லூரி சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தஞ்சையில் இருந்து வல்லம் நோக்கி வந்த ஒரு கார் பெரியசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பெரியசாமியும் அவருடைய மனைவியும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் பெரியசாமிக்கு இரண்டு கால்களும் முறிந்தன. அவரது மனைவி அன்னக்கிளியும் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்